கோவையில் உற்சாகமாக நடைபெற்ற மோடி பொங்கல் கொண்டாட்டம்
கோவை நகரில் நடைபெற்ற மோடி பொங்கல் விழா, பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் பாஜக தேசிய செயற்குழு தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.
இரு நாள் சுற்றுப்பயணமாக கோவைக்கு வந்திருந்த நிதின் நபின், வடவள்ளி பகுதியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் கிராமிய மரபுகளை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மேடையெங்கும் அரங்கேறின.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதின் நபினும் வானதி சீனிவாசனும், பெண்களுடன் இணைந்து கும்மி பாடலுக்கு நடனமாடி விழாவை மேலும் உற்சாகமாக்கினர்.
பாரம்பரிய உடையில் விழாவுக்கு வந்திருந்த நிதின் நபின், அங்கிருந்த தாய்மார்களிடம் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் மற்றும் அதன் ஆன்மீக, சமூக முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டுகள் குறித்தும் அவர் தகவல்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர், உறியடித்து விழாவில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, வள்ளி கும்மி, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளையும் நிதின் நபின் ஆர்வமுடன் ரசித்தார்.