வீட்டு கட்டுமானத்தில் திடீர் தங்க நகைகள் கண்டுபிடிப்பு
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் நடைபெற்று வந்த ஒரு வீட்டுக் கட்டுமானப் பணியின் போது, பழமையான தங்க நகைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லக்குண்டி கிராமத்தைச் சேர்ந்த கங்கவ்வா பசவராஜா என்பவர், தனது இல்லத்தை புதிதாக கட்டுவதற்காக அடித்தளம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார். அந்தப் பணிக்காக மண் தோண்டியபோது, மண்ணுக்குள் புதைந்த நிலையில் பூட்டிய ஒரு பெட்டி கிடைத்தது.
அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் பழங்காலத்தைச் சேர்ந்த தங்க ஆபரணங்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து பெட்டியில் உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கட்டுமான பணியில் எதிர்பாராத வகையில் தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.