மோடி ட்ரம்பை புறக்கணித்தாரா? – அமெரிக்க அமைச்சரின் தவறான குற்றச்சாட்டுக்கு இந்தியா விளக்கம்
இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டாததற்குக் காரணம், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொள்ளாததே என அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் கூறிய கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டு உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன், குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தாலும், இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு காரணமாக மோடி அதிருப்தியில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை “சிறந்த மனிதர்” என பாராட்டிய ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தமக்கு விருப்பமல்ல என்பது மோடிக்கு தெரியும் என்றும் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவை மகிழ்விப்பதற்காக இந்தியா தனது கொள்கையை மாற்றி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைத்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், தாம் மகிழ்ச்சியடையவில்லை என்பதை மோடிக்கு தெரியும் என்றும், தமது விருப்பத்திற்கு எதிராக நடந்தால் வரிவிதிப்பு மேலும் உயரலாம் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். இதன் தொடர்ச்சியாக, ரஷ்யாவிலிருந்து மலிவான எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க அனுமதிக்கும் மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தப் பின்னணியில், Chamath Palihapitiya நடத்தும் All-In Podcast நிகழ்ச்சியில் பேசிய ஹோவர்ட் லூட்னிக், இந்தியாவுக்கு எதிரான வரிவிதிப்பு ஒரு திட்டமிட்ட வர்த்தக முடிவு அல்ல, ட்ரம்பின் தனிப்பட்ட ஈகோ காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என கூறினார்.
மேலும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தயார் நிலையில் இருந்ததாகவும், இறுதி முடிவுக்காக பிரதமர் மோடி தம்மை அழைப்பார் என ட்ரம்ப் 21 நாட்கள் காத்திருந்ததாகவும் லூட்னிக் தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் ட்ரம்பை தொடர்பு கொண்ட மறுநாளே அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாக எடுத்துக்காட்டிய அவர், மோடி ட்ரம்பை அழைக்காததால் அமெரிக்கா இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்ததாகவும் கூறினார்.
இதற்கிடையே, ஜெர்மனியைச் சேர்ந்த பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் நாளிதழ், ட்ரம்ப் பிரதமர் மோடியை நான்கு முறை தொடர்பு கொள்ள முயன்றும், அவர் பேச மறுத்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவின் எரிசக்தி ஒப்பந்தங்கள் சந்தை நிலவரம் மற்றும் நுகர்வோர் தேவைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்றும், தற்காலிக அழுத்தத்தின் கீழ் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் செய்யப்படாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். இந்தியா அவசர முடிவுகள் எடுப்பதில்லை; காலக்கெடு அல்லது அச்சுறுத்தலின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்வதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் தாமதமானதற்குக் காரணம் மோடி ட்ரம்பை தொடர்பு கொள்ளாததே என பொதுவெளியில் கூறிய ஹோவர்ட் லூட்னிக்கின் கருத்துகளை இந்திய அரசு முற்றாக மறுத்துள்ளது. அவரது கருத்துகள் தவறானவை என இந்தியா தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிரதமர் மோடியும் அதிபர் ட்ரம்பும் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், கடந்த ஆண்டு மட்டும் இருவரும் எட்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார். அந்த உரையாடல்களில் இருநாட்டு உறவுகள் மற்றும் கூட்டாண்மை தொடர்பான பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரி 13 முதல் இந்தியா மற்றும் அமெரிக்கா, சமநிலையான மற்றும் பரஸ்பர நன்மை அளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், இருநாடுகளும் அதில் உறுதியாக இருந்ததாகவும் ஜெய்ஸ்வால் விளக்கினார்.
சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் முக்கிய நாடாக அமெரிக்கா தொடர்ந்து நான்காவது ஆண்டாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 131.84 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 18 சதவீதமும், இறக்குமதியில் 6.22 சதவீதமும், மொத்த வர்த்தகத்தில் 10.73 சதவீதமும் அமெரிக்காவுடன் நடைபெறுவதை காட்டுகிறது.