ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நகை காணாமல் போன விவகாரம் – தனிப்பட்ட நீதிபதி விசாரணை வேண்டும்
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் 312 சவரன் தங்க நகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, தனி நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
பக்தர்கள் அர்ப்பணித்ததாகக் கூறப்படும் 312 சவரன் தங்க நகைகள் ஏகாம்பரநாதர் கோயிலில் மாயமானது, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொண்டபோது, ஒரு துகளளவு தங்கமும் கூட சுவாமிகளுக்கு அலங்காரமாக பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தை முன்வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் முழுமையான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், காணாமல் போன நகைகளை கண்டறிய தனிநீதிபதி மூலம் விசாரணை நடத்துவது அவசியம் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.