இடும்பன் கோயிலை பழனி கோயில் நிர்வாகத்துடன் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு
பழனியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இடும்பன் கோயிலை, பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள இடும்பன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி மேலாண்மையில் இருந்து வருகிறது. இந்த கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் 14 துணைக் கோயில்களும், சுமார் 60 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களும் உள்ளன.
இந்த சூழலில், இடும்பன் கோயிலை பழனி முருகன் கோயில் நிர்வாகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானம், பழனி கோயில் அறங்காவலர் குழு மற்றும் கோயில் இணை ஆணையர் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த தீர்மானம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவரம் வெளியானதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் ஒரு பகுதியாக, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி, இடும்பன் கோயிலை தனித்துவமாகவே பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.