வாக்குறுதி எண் 181–ஐ நெற்றியில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள்
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, திமுகவின் நம்பிக்கை மோசடி மற்றும் வாக்குறுதி மீறலுக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், திமுக அரசு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் சதவீத கணக்கில் மக்கள் முன் தெரிவித்துவருவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு தரப்பட்ட வாக்குறுதியை நினைவூட்டும் நோக்கில், “வாக்குறுதி எண் 181” எனக் குறிப்பிட்டு, அதை நெற்றியில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2016 தேர்தலில், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவோம் என வாக்குறுதி கொடுத்திருந்த ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை முற்றிலும் புறக்கணித்து வருவதாகவும், 10% மட்டுமே வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும் அண்ணாமலை விமர்சித்தார். இதன் மூலம், திமுக தமிழக மக்களை எவ்வளவு ஏளனமாக பார்க்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக இது உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அண்ணாமலை, திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு 2026 தேர்தலில் மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.