நடிகர் விஜய் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையில் குறைபாடு – நீதிமன்ற விசாரணை தொடர்ச்சி
நடிகரும், த.வெ.க. கட்சியின் தலைவருமான விஜய், 2016–17 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையை சமர்ப்பித்ததில் விதிமுறை மீறல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜயின் இல்லத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், புலி திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் ரூ.15 கோடி சம்பளம் பெற்றிருந்ததும், அந்த வருமானத்தை வரி கணக்கில் முழுமையாக அறிவிக்காமல் மறைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டிய நிலையில், நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த அபராத உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தில் எந்தவித தவறும் இல்லை என்றும், வருமான வரி தீர்ப்பாயத்தை விஜய் அணுகிய பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதி, நடிகர் விஜய் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.