திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் அனுமதி இன்றி கொடியேற்றம் – தர்கா நிர்வாகத்துக்கு எதிராக போலீசில் புகார்
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள கல்லத்தி மரத்தில் உரிய அனுமதி பெறாமல் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் செய்யப்பட்டதாக கூறி, சம்பந்தப்பட்ட தர்கா நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு முருகன் கோயிலின் தல விருட்சமாகக் கருதப்படும் கல்லத்தி மரம், மருத்துவ குணங்கள் நிறைந்ததும், இந்து மரபில் புனிதமான மரமாகவும் போற்றப்படுகிறது. இந்நிலையில், அருகிலுள்ள தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவின் போது, மலை மீது உள்ள அந்த கல்லத்தி மரத்தில் கொடி ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, இந்த விவகாரம் மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, கல்லத்தி மரம் அமைந்துள்ள பகுதி கோயில் சொத்தா அல்லது தர்கா கட்டுப்பாட்டிலா என்ற கேள்வியை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எழுப்பினார். மேலும், இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகம் தர்கா நிர்வாகத்துக்கு எதிராக முறையான புகார் அளிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இந்த நீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலக உள்துறை கண்காணிப்பாளரின் அனுமதி இன்றி சந்தனக்கூடு கொடியேற்றம் நடத்தப்பட்டதாகவும், கல்லத்தி மரத்தில் ஏற்றப்பட்ட கொடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.