ஆதார் சேவைகளுக்கான புதிய அடையாள சின்னம் வெளியீடு
ஆதார் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய மாஸ்காட் (அடையாளச் சின்னம்) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாஸ்காட் வடிவமைப்பில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், அரசு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இரண்டு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் இருந்து மாணவர்கள், கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட 875 பேர் தங்களது வடிவமைப்புகளை அனுப்பியிருந்தனர்.
அவற்றில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அருண் கோகு உருவாக்கிய மாஸ்காட் தேர்வாகியுள்ளது. அதேபோல், பெயர் தேர்வு பிரிவில் மத்தியபிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த ரியா ஜெயின் பரிந்துரைத்த “உதய்” என்ற பெயர் இறுதி செய்யப்பட்டது.
இந்த புதிய அடையாளச் சின்னத்தின் அறிமுக நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் நீல்கந்த் கலந்து கொண்டு மாஸ்காட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
எதிர்காலத்தில் ஆதார் சேவைகள் தொடர்பான விளம்பரங்கள், காணொளிகள் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் அனைத்தும் “உதய்” மாஸ்காட் மூலம் வெளியிடப்பட உள்ளன.