மெரினாவில் மோதல் – போக்குவரத்து காவலர்கள் பணியிடைநீக்கம்
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய போக்குவரத்து காவலர்களை பணியிடைநீக்கம் செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சண்முகசுந்தரம், மெரினா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, ஒரு இளைஞரின் வாகனத்தில் காப்பீடு இல்லாததை கண்டறிந்து ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு போக்குவரத்து காவலரான ராகவன், காவலர் சீருடை அணியாமல், லியோ என்ற இன்னொரு போக்குவரத்து காவலருடன் சம்பவ இடத்திற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும், இன்சூரன்ஸ் இல்லாத காரணத்திற்காக அபராதம் விதிக்க முடியாது என தலைமை காவலர் சண்முகசுந்தரத்திடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால், ராகவன் மற்றும் சண்முகசுந்தரம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும், இதில் சண்முகசுந்தரம் ராகவனை தாக்கும் காட்சிகள் வீடியோவாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில், போக்குவரத்து காவலர்கள் ராகவன் மற்றும் லியோ ஆகியோரை பணியிடைநீக்கம் செய்ய துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், தலைமை காவலர் சண்முகசுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.