எழும்பூரில் போராட்டம் நடத்திய 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை எழும்பூரில் தொடர்ந்து 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2,000க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குகள் பதிவு செய்துள்ளது.
நீண்ட காலமாக இருந்து வரும் சம்பள வேறுபாடுகளை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், நேற்று 14வது நாளாக எழும்பூரில் அமைந்துள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்களை குழுக்களாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அனுமதி இன்றி கூடியது, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ், மொத்தம் 2,185 இடைநிலை ஆசிரியர்கள் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.