சுகவனேஸ்வரர் கோயிலில் தீபம் ஏற்ற புதிய கட்டுப்பாடு – பக்தர்கள் அதிர்ச்சி
சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அரசும் அறநிலையத்துறையும் எடுத்த நடவடிக்கைகள் பக்தர்களின் மனதில் இன்னும் நீங்காத காயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் தாக்கம் தற்போது சேலத்திலும் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.
சுகவனேஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளாக 32 தெய்வங்களுக்கான தனித்தனி சன்னதிகளில் தீபம் ஏற்றும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த நடைமுறைக்கு தடை விதித்து, ஒரே இடத்தில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த திடீர் மாற்றத்தால் பக்தர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். “சேலத்திலும் ஒரு திருப்பரங்குன்றம் உருவாகிறதா?” என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.