பயங்கரவாதிகளுக்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் பயிற்சி அளிக்கும் பாகிஸ்தான் – கடல் வழித் தாக்குதலுக்கான புதிய சதி
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் புதிய வடிவமாக, இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில் பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர்-ஈ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள், ஸ்கூபா டைவிங் மற்றும் நீச்சல் நிபுணர்களை உருவாக்கும் வகையில் பயங்கரவாத பயிற்சிகளை வழங்கி வருவதாக உளவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் தாக்கி முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் 100-க்கும் அதிகமான தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதோடு, பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களும் இந்திய தாக்குதலில் சேதமடைந்தன.
இதனைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்தது. “ரத்தமும் நீரும் ஒன்றாக ஓட முடியாது” என்ற கடும் நிலைப்பாட்டை இந்தியா தெளிவாக எடுத்துக் காட்டியது.
இந்த சூழலில், லஷ்கர்-ஈ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஈ-முகம்மது போன்ற பயங்கரவாத அமைப்புகள், பெண் ஜிகாதிகளை உருவாக்கும் புதிய திட்டங்களை தொடங்கியுள்ளன. அதேபோல், கல்வியறிவு பெற்ற ‘வைட் காலர்’ தீவிரவாதிகளை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் ஜிகாதிகளாக செயல்பட்டது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்திய இராணுவத்தின் கடுமையான கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளால், நில எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சிகள் பெரும்பாலும் தடுக்கப்பட்டு வருகின்றன. எல்லையை மீறி நுழையும் தீவிரவாதிகள் உடனடியாக வேட்டையாடப்படுகின்றனர்.
இதனால், தற்போது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் கடல் வழியை மாற்றுப் பாதையாகக் கொண்டு, நீருக்கடியில் மறைந்து செயல்படக்கூடிய ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் நீச்சல் வீரர்களுக்கான பயிற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த வகை முயற்சிகள் புதிதானவை அல்ல. 2008 ஆம் ஆண்டு, பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் மும்பை வந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், கொடூரமான மும்பை தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு–காஷ்மீர் பகுதிகளிலும், நீச்சல் மற்றும் ஸ்கூபா டைவிங் போன்ற நீர்சார் பயிற்சிகள் பெரும் அளவில் நடைபெற்று வருகின்றன.
மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான பயிற்சி அல்லது விளையாட்டு நீச்சல் பயிற்சி என்ற பெயரில், போலியான விளம்பர பதாகைகளுடன் இந்த பயங்கரவாத பயிற்சிகள் வெளிப்படையாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
லஷ்கர்-ஈ-தொய்பா மற்றும் ‘ஜம்மு காஷ்மீர் யுனைடெட் மூவ்மெண்ட்’ அமைப்பின் முக்கிய தலைவர்கள் ரிஸ்வான் ஹனிஸ், அமீர் ஜியா ஆகியோர் இந்த நீர்சார் பயிற்சிகளை நேரில் கண்காணித்து வரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்த பயிற்சிகள் மீட்பு நடவடிக்கைகளுக்கோ அல்லது பொழுதுபோக்கு விளையாட்டுக்கோ அல்ல; மாறாக கடல் வழி ஊடுருவல் மற்றும் கடற்படை சார்ந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கான போர்த் தயாரிப்புகள் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதோடு, குறிப்பாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற கடலோர மாநிலங்களுக்கு தீவிர அபாய எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது.
மேலும், நேபாளம் மற்றும் வங்கதேசம் வழியாகவும், கடல் பாதைகளைக் கொண்டு இந்தியாவுக்குள் ஊடுருவ புதிய வழித்தடங்களை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு வருவதாக உளவுத் துறைகள் தெரிவிக்கின்றன.
சமீப காலங்களில் நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நிலைமாற்றங்கள், பாகிஸ்தானுக்கு சாதகமாகவும் இந்தியாவுக்கு சவாலாகவும் மாறியுள்ளது என பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.