தனியார் பள்ளியில் உற்சாகமாக நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம்
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் செயல்படும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில், பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை நடனம், மாட்டு வண்டி சவாரி போன்ற கிராமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்று, சமத்துவ பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஆலங்குளத்தில் இயங்கி வரும் அந்த தனியார் பள்ளியில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை சிறப்பாக அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் இன்று சமத்துவத்தை முன்னிறுத்திய பொங்கல் விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழர் பாரம்பரிய உடைகளான பாவாடை, தாவணி அணிந்த மாணவிகளும், வேட்டி மற்றும் சட்டை அணிந்த மாணவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாணவ, மாணவிகள் அனைவரும் மண்பானையில் அரிசி மற்றும் வெல்லம் சேர்த்து பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினர். விழாவின் போது நாதஸ்வரம், தவில் இசை முழங்க, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் அரங்கேறி, பள்ளி வளாகம் ஒரு திருவிழா மையமாக மாறியது.
மேலும், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இதில் உற்சாகமாக பங்கேற்றனர்.