தணிக்கை சான்று இல்லாமல் வெளியீட்டு தேதி அறிவித்தால் அது ஆபத்து – ஜனநாயகன் படத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்ன?
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து, மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் நரசிம்மன், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:
நாடு, சாதி, மதம், அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து வெளிப்படையான விமர்சனங்கள் இடம்பெற்றாலும், எந்த தரப்பினரின் உணர்வுகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதே தணிக்கை சான்றிதழ் வழங்கும் அடிப்படை விதிமுறையாகும்.
ஜனநாயகன் படத்தில் உள்ள உண்மையான சிக்கல் என்ன என்பது படக்குழுவுக்கும் தணிக்கை குழுவிற்கும் மட்டுமே முழுமையாக தெரியும் என்றும் அவர் கூறினார்.
படக்குழு தேவையான திருத்தங்களை செய்து, தடையில்லா சான்றிதழ் பெறும் பட்சத்தில், படத்தை திரையிட அனுமதி கிடைப்பது உறுதி எனவும் அவர் விளக்கினார்.
தணிக்கை குழுவின் செயல்பாடுகளில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை என்றும், நடிகர் விஜயுக்கும் அவரது குழுவினருக்கும் தணிக்கை விதிமுறைகள் நன்கு தெரிந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்படி தேவையான மாற்றங்கள் செய்யப்படாமல் அல்லது ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்படாமல் இருந்தால், சான்றிதழ் வழங்கப்படாது என்பது உறுதியான நடைமுறை என தெரிவித்தார்.
மேலும், தணிக்கை குழு உறுப்பினர்கள் எழுப்பும் எதிர்ப்புகளை பரிசீலிக்கும் அதிகாரம் மண்டல அதிகாரியிடமும், அதற்கு மேல்முறையீடு செய்யும் உரிமை பரிந்துரை குழுவிடமும் இருப்பதால், இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என அவர் வலியுறுத்தினார்.
தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது, முழுக்க முழுக்க படக்குழுவின் பொறுப்பும் ஆபத்தும் தான் என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தி தேவையற்ற பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன என்பதே தனது தனிப்பட்ட கருத்து எனவும் நரசிம்மன் தெரிவித்தார்.