ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS பொருத்த வேண்டும் – தமிழக அரசிடம் காளை வளர்ப்போர் கோரிக்கை
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. இதனுடன், போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார்படுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. காளைகளை குடும்ப உறுப்பினர்களைப் போலவே பாவித்து, அவற்றை அக்கறையுடன் வளர்த்து வரும் காளை வளர்ப்போரின் வாழ்க்கையை இந்த செய்தித் தொகுப்பு எடுத்துரைக்கிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யனார் குளம் பகுதியைச் சேர்ந்த சுதந்திரா தேவி, காளை வளர்ப்பில் அளவிட முடியாத ஆர்வம் கொண்டவர். அவரோடு மட்டுமல்லாமல், அவரது குடும்பம் முழுவதும் தலைமுறை தலைமுறையாக காளை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, 22 காளைகளை தங்களின் குடும்ப உறுப்பினர்களைப் போலவே எண்ணி அவர்கள் பராமரித்து வருகின்றனர்.
சுதந்திரா தேவியின் பேத்தி ஹாசிணிக்கும் காளை வளர்ப்பில் சிறு வயதிலிருந்தே ஆழ்ந்த ஈடுபாடு உள்ளது. மூன்றாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே காளைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டு வரும் ஹாசிணி, இன்றளவும் தனது பாட்டிக்கு துணையாக இருந்து காளைகளை பராமரித்து வருகிறார்.
மதுரை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை அழைத்துச் செல்லும் போது, அவற்றை பாதுகாப்பாக அவிழ்த்துவிடுவதற்கான போதிய வசதிகள் இல்லாமை, பரிசு வழங்குவதில் ஏற்படும் குழப்பங்கள் போன்ற பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக காளை வளர்ப்போர் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் போதுமான “சேசிங் பாயிண்ட்” வசதிகள் இல்லாததால், காளைகள் வழித்தவறிச் செல்லும் சம்பவங்கள் நிகழ்வதாகவும், இதனைத் தடுக்க அரசே முன்வந்து காளைகளுக்கு GPS கருவிகளைப் பொருத்த வேண்டும் என்றும் காளை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கேற்ப காளைகளைப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
காளைகளும், காளையர்களும் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பரவலாக எழுந்துள்ளது.