ரயில்வே கேட் திறக்கக் கோரி தகராறு – கொலை மிரட்டலையும் புத்திசாலித்தனமாக சமாளித்த பெண் ஊழியர்
பேராவூரணி அருகே, மருத்துவமனைக்கு செல்ல ரயில்வே கேட்டை திறக்குமாறு வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்த உறவினர்களை, பணியில் இருந்த பெண் கேட் கீப்பர் மிக நிதானமாக கையாண்ட காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், உடல்நலக் கோளாறு காரணமாக திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து, அவரை உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பின்னவயல் பகுதியில் உள்ள ரயில்வே கடவை அருகே வந்தபோது, ரயில் போக்குவரத்துக்காக கேட் மூடப்பட்டிருந்தது. அங்கு பணியிலிருந்த கேட் கீப்பரிடம், உறவினர்கள் உடனடியாக கேட்டை திறக்க வேண்டும் என கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயில் வருகை இருப்பதால் பாதுகாப்பு காரணமாக கேட்டை திறக்க இயலாது என பெண் ஊழியர் விளக்கம் அளித்தார். இதற்கு பதிலளித்த உறவினர்கள், மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சூழ்நிலையை நிதானமாக கையாண்ட கேட் கீப்பர், தன்னுடைய இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என அறிவுரையளித்தார்.
அதனைத் தொடர்ந்து, அவரது நிலையை உறவினர்கள் புரிந்து கொண்டு, கேட் கீப்பரின் இருசக்கர வாகனத்தில் அந்த பெண்ணை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.