தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எம்ஜிஆர் பெயர், புகைப்படம் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பெயரும் புகைப்படமும் அகற்றப்பட்டதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைமைக்கு எம்ஜிஆர் மீது உள்ள பகை உணர்வு இன்னும் நீங்காமல் இருப்பது, அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் மொழியை அரசியலாக்கி வாழ்ந்த கருணாநிதியின் பெயரை, எந்தவிதமான சங்கடமும் இன்றி கழிவறைகள் முதல் பல்வேறு இடங்கள் வரை சூட்டும் முதலமைச்சர் ஸ்டாலின், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எம்ஜிஆரின் பெயரை அகற்றியிருப்பது அதிகார மமதையின் உச்சகட்ட வெளிப்பாடாகும் என்றும் அவர் சாடியுள்ளார்.
அரசியலை மூலமாகக் கொண்டு ஊழலில் ஈடுபட்டு, பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்த கருணாநிதி குடும்பத்தின் வஞ்சகமான மனப்பான்மையும், நரித்தனமான செயல்பாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எம்ஜிஆரின் புகழை மறைக்க அல்லது அழிக்க முயற்சிப்பவர்கள் தாமே அழிந்து போவார்கள் என்றும், இத்தகைய பழிவாங்கும் அரசியலை உடனடியாக கைவிட்டு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் எம்ஜிஆரின் புகைப்படத்தை மீண்டும் பதிவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருணாநிதியின் முழுக் குடும்பத்திற்கும் அரசியல் அடையாளத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர் என்பதையும் நினைவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, அவரது பெருமையை மங்கச்செய்ய முயற்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.