திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பராமரிப்பு இல்லாமல் சீரழிவு – சமூக ஆர்வலர்கள் கண்டனம்
திருவண்ணாமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயில், தேவையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மெதுவாக சிதிலமடைந்து வருவதாக சமூக நல ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள இந்தப் பழமையான திருக்கோயிலில், ஆசியாவிலேயே உயரம் மிகுந்ததாகக் கருதப்படும் 217 அடி உயர ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட மொத்தம் 9 பிரம்மாண்ட கோபுரங்கள் அமைந்துள்ளன.
இந்த கோபுரங்களில் அழகுற செதுக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சிற்பங்கள் மற்றும் பரிவார தெய்வ மூர்த்திகள், பல நூற்றாண்டுகளைக் கடந்த அபூர்வமான கலைச் செல்வங்களாக விளங்கி வருகின்றன.
ஆனால், இவ்விலைமதிப்பற்ற கோபுரச் சிற்பங்கள் முறையான பராமரிப்பு இன்றித் தொடர்ச்சியாக சேதமடைந்து வருவது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாதந்தோறும் உண்டியல் காணிக்கைகள் மூலம் 4 கோடி முதல் 6 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து வரும் நிலையில், அந்த வருவாயை எண்ணிக் கணக்கிடுவதில் காட்டப்படும் அக்கறை, கோயிலின் கோபுரங்களையும் சிற்பங்களையும் பாதுகாப்பதில் இந்து சமய அறநிலையத் துறை காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.