திருவல்லிக்கேணி ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் நுழைவாயில் கட்டுமானம் சேதம் – பரபரப்பு
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்று வந்த நுழைவாயில் கட்டுமானப் பணிகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோயிலில், நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் சமீபத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில், அங்கு திடீரென வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள், கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு மிரட்டியதுடன், ஏற்கனவே அமைக்கப்பட்ட கட்டிடப் பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், இந்து முன்னணி மற்றும் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், மத ரீதியான பதற்றத்தை உருவாக்கும் நோக்கிலேயே இந்த அத்துமீறல் நடைபெற்றுள்ளதாகவும், இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இந்து சமய அறநிலையத் துறை எந்தவிதமான புகாரும் அளிக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக விமர்சித்த அவர், கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் விரைவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.