வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள்
தியாக உணர்வும், முன்னோக்கிய சிந்தனையுடன் கூடிய தலைமையும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். துணிச்சலும், போர்தந்திரத்தில் சிறந்து விளங்கிய திறமையும் கொண்ட அவர், இந்தியாவின் வீர வரலாற்றில் மங்காத இடம் பெற்ற வீராங்கனையாக நினைவுகூரப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
காலனித்துவ அடக்குமுறைக்கு எதிராக எழுந்து நின்ற அவர், இந்தியாவை ஆளும் உரிமை இந்தியர்களுக்கே என்ற கருத்தை உறுதியாக முன்வைத்தார். நல்ல நிர்வாகத்திற்கும், பண்பாட்டு பெருமைக்குமான அவரது அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது என்றும், அவரது தியாகமும் தொலைநோக்குச் சிந்தனையும் தலைமுறை தாண்டி மக்களை ஊக்குவிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பதிவில்,
வீரத்தையும் அறிவுத் திறனையும் ஒருங்கே கொண்ட சிவகங்கை சீமையின் பெருமைமிக்க வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் இன்று என தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து, அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திய முதல் பெண் விடுதலைப் போராளி அவர் எனவும், ஆங்கிலேய ஆதிக்கத்தை வீழ்த்த போர்க்களத்தில் நின்ற அசைக்க முடியாத தைரியத்தின் உயிர்ப்பான சாட்சியே அவரது வாழ்க்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேச விடுதலைக்காக உயிரையே அர்ப்பணித்த அந்த வீரமங்கையின் தியாகமும் வீரமும் இன்றும் என்றும் நமக்கு வழிகாட்டும் தீபமாகத் திகழும் என தெரிவித்துள்ளார்.
வீரமங்கை வேலு நாச்சியாரின் புகழ் நிலைத்தோங்கட்டும்; அவரது வீரத்தையும் உயரிய தியாகத்தையும் இந்நாளில் வணங்குவோம் என்றும் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியாவில் முதன்முறையாக போர்க்களத்தில் இறங்கிய பெண் அரசியாக வேலு நாச்சியார் விளங்கினார் என குறிப்பிட்டுள்ளார்.
மருது சகோதரர்களுடன் இணைந்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போரிட்டு திருப்பத்தூர் கோட்டையை கைப்பற்றிய அவரது வீர வரலாற்றை நினைவு கூர்ந்து, அவரது பிறந்த நாளில் வீரதீர நினைவுகளை மரியாதையுடன் வணங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தனது பதிவில்,
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் இந்திய பெண் வீராங்கனை மகாராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.
அரசியல் தெளிவும், துணிச்சலான முடிவெடுக்கும் திறனும், மக்களின் நலனில் கொண்ட ஆழ்ந்த அக்கறையும் அவரின் அடையாளமாக இருந்தது.
தமிழ் மண்ணில் பெண்கள் வீரத்திலும் அறிவிலும் தலைசிறந்தவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் வேலு நாச்சியார். அறத்திலும் மறத்திலும் மேன்மை பெற்ற அந்த வீரமங்கையின் புகழை போற்றி வணங்குகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.