வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் அணியிலிருந்து நீக்கம்
வங்கதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரகுமானை தங்களது அணியிலிருந்து விடுவிப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், வங்கதேச அணியின் முக்கிய பந்துவீச்சாளரான முஸ்தஃபிசுர் ரகுமானை, நடிகர் ஷாருக்கான் உரிமையிலுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 கோடி 20 லட்சம் ரூபாய் என்ற உயர்ந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால், வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை காரணமாகக் கொண்டு, முஸ்தஃபிசுர் ரகுமான் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என பாஜக உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலையிட்டு, முஸ்தஃபிசுர் ரகுமானை உடனடியாக அணியிலிருந்து நீக்க வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை தேர்வு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரகுமானை அணியிலிருந்து விடுவித்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிவித்துள்ளது.