அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்: இரு தரப்பினரிடையே மோதல் – போலீஸ் பாதுகாப்பு கோரிக்கை
மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு தரப்பினருக்கிடையே மோதல் உருவாகியுள்ளது. இந்நிலையில், தங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, தமிழகத்திலேயே மிகப் புகழ்பெற்றதாக கருதப்படுகிறது. இதுவரை இந்த போட்டியை கிராம கமிட்டி குழுவினரும், தென்கால் பாசன விவசாயிகள் குழுவினரும் இணைந்து நடத்தி வந்தனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போட்டியை யார் நடத்த வேண்டும் என்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே முரண்பாடு இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையின் போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.
இந்தச் சூழலில், மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்த கிராம கமிட்டி குழுவினர், தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.