குன்னூரில் நள்ளிரவு முழுவதும் பெய்த அடைமழை!
குன்னூரில் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட குன்னூரில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வந்த நிலையில், நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை பலத்த மழை பொழிந்தது.
தொடர்ச்சியான மழையினால் குன்னூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குன்னூர் உழவர் சந்தை அருகே அமைந்துள்ள மாடல் ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும், உலக சந்தை பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், மண் சரிவில் சிக்கி சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், மண் அகற்றும் மற்றும் சீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.