ஆங்கில புத்தாண்டு : ரூ.400 கோடியை கடந்த காலண்டர் சந்தை விற்பனை!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலண்டர் சந்தையில் ஏற்பட்ட விற்பனை ரூ.400 கோடியை கடந்துள்ளதாக அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகாசி, பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில்கள் மட்டுமின்றி காலண்டர் உற்பத்திக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழ்கிறது. இங்கு 300-க்கும் அதிகமான நிறுவனங்கள் காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
ரூ.15 முதல் ரூ.2,500 வரை பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் தரங்களில் காலண்டர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 10 சதவீதம் கூடுதல் விற்பனை நடைபெற்றுள்ளதாக அச்சக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பெருமளவில் காலண்டர்களை முன்பதிவு செய்ததே இந்த விற்பனை உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, 2027 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு காலண்டர் தயாரிப்பு பணிகள், வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் பஞ்சாங்கம் வெளியான பின்னர் தொடங்கப்படும் என்றும் அச்சுத் தொழிலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.