ஈரோட்டில் ஏற்காடு விரைவு ரயிலுக்கு வழியனுப்பிய திமுக எம்.பி., எம்.எல்.ஏ – பாஜக கண்டனம்
ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயிலுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் ஆகியோர் வழியனுப்பியதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு – சென்னை இடையே இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயிலின் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து, மத்திய ரயில்வே துறை இந்த ரயிலின் புறப்படும் நேரத்தை இரவு 9 மணியில் இருந்து 9.45 மணியாக மாற்றி அறிவித்தது. இந்த புதிய நேர அட்டவணை ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், ஈரோடு ரயில் நிலையத்தில் இரவு 9.45 மணிக்கு புறப்பட்ட ஏற்காடு விரைவு ரயிலுக்காக சிறப்பு வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது, ரயில் நேர மாற்றத்திற்கு காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜக நிர்வாகிகள் கோஷமிட்டனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், திமுகவின் முயற்சியாலேயே ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டது என கூறி திமுக ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ரயிலுக்கு பச்சைக் கொடி காட்டி வழியனுப்பினார். அதேபோல், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் பச்சை டார்ச் லைட்டை ஏற்றி ரயிலை தொடங்கி வைத்தார். இந்த நடவடிக்கைக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.