பொங்கல் திருநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே மண் பானை தயாரிப்பு பணிகள் தீவிரம்
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே மண் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
போச்சம்பள்ளி அருகிலுள்ள சென்றாயம்பட்டி கிராமத்தில், பல குடும்பங்கள் பாரம்பரியமாக மண் பானை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பானை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மூடியுடன் கூடிய மண் பானை, இந்த ஆண்டு 500 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கிராமப்புற மக்கள் மட்டுமல்லாது, நகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் பாரம்பரியத்தை காக்கும் வகையில் மண் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.