தவெக கூட்டணி விவகாரம் – மீண்டும் ‘காங்கிரஸ் ஜனநாயக பேரவை’ உருவாகுமா?
தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தால், மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு உருவாகும் வாய்ப்பு உள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி திமுக மீது அழுத்தம் செலுத்தி வருவதாகவும், அதற்கு திமுக தலைமையகம் சம்மதம் அளிக்காமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அழைப்பை தமிழக காங்கிரசில் உள்ள ஒரு பிரிவு ஆதரித்து வரும் நிலையில், ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் இணைந்தால், அதனை ஏற்காத ப.சிதம்பரம் தலைமையில் “காங்கிரஸ் ஜனநாயக பேரவை” என்ற பெயரில் மீண்டும் புதிய கட்சி தொடங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.