டிரம்புக்கு ஆறுதலாக அமைதி விருதை அறிவித்த இஸ்ரேல்!
அமைதிக்கான நோபல் விருது கிடைக்காததால் ஏமாற்றத்தில் இருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு, இஸ்ரேல் அரசு ஆறுதலாக அமைதி சார்ந்த சிறப்பு விருதை அறிவித்துள்ளது.
உலகளவில் அமைதியை நிலைநாட்ட தாம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அங்கீகாரமாக, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் அவரது பெயரை பரிந்துரைத்திருந்த போதிலும், அந்த உயரிய விருது அவருக்கு கிடைக்கவில்லை.
இந்த சூழலில், மேற்காசிய நாடான இஸ்ரேலின் மிக உயர்ந்த குடிமகன் விருதாகக் கருதப்படும் “இஸ்ரேல் பரிசு” அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு வழங்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
அமைதி பிரிவில், இஸ்ரேல் குடிமகன் அல்லாத ஒருவருக்கு முதன்முறையாக இந்த விருது வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய நெதன்யாகு, பல பழக்கவழக்கங்களை உடைத்து உலகை வியப்பில் ஆழ்த்திய டிரம்ப், இஸ்ரேல் மற்றும் யூத மக்களுக்கு செய்த முக்கிய பங்களிப்புகளுக்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரும் ஆண்டு நடைபெற உள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவின் போது, டிரம்ப் இந்த மதிப்புமிக்க விருதை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.