2026 ஆங்கில புத்தாண்டு – அண்ணாமலையார் கோயிலில் பெருந்திரளான பக்தர்கள்!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. ஆகம மரபின்படி சிவபெருமானுக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்லும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.
இதேநேரம், புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோயில் முன்பாகவும் திரளான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இரவு நேரங்களில் கோயில் நடை சாத்தப்பட்டிருந்த போதிலும், ராஜகணபதி வெளியில் தெரியுமாறு கிரில் கேட் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் நள்ளிரவுக்கு முன்பே பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அதேபோல், சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலிலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்து புத்தாண்டை வரவேற்றனர்.