சென்னையில் புத்தாண்டு நாளிலும் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையால் கைது!
சென்னையில் புத்தாண்டு தினத்திலும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் மொத்தமாக கைது செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொடர்ச்சியாக, புத்தாண்டு நாளிலும் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். சூளை கண்ணப்பர் திடலில் இருந்து ரிப்பன் மாளிகையை நோக்கி பேரணியாக அவர்கள் நகர்ந்தனர்.
இந்த பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போராட்டத்தில் பங்கேற்ற தூய்மைப் பணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்களை நடுவழியிலேயே வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், புத்தாண்டு போன்ற நாளில்கூட அரசு தங்களை புறக்கணித்து விட்டதாகவும், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் தூய்மைப் பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.