சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் – மூன்றாம் நாளாக தொடரும் போராட்டம்
புதிய அரசாணைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், புத்தாண்டு நாளிலும் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை எழிலக வளாகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அரசுத் தரப்பில் இதுவரை எந்தத் தீர்வும் எடுக்கப்படாத காரணத்தால், புத்தாண்டைக் கூட பொருட்படுத்தாமல் போராட்டம் தொடரும் என நலச்சங்கம் அறிவித்திருந்த நிலையில், 100-க்கும் அதிகமான அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய நலச்சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார், புதிய அரசாணைகள் அலுவலர்களின் நலனுக்கானவை அல்ல என்றும், அவை சிறு மற்றும் குறு விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
தோட்டக்கலைத் துறை தனிச்சிறப்பான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட துறையாக இருப்பதாகவும், பிற துறைகளின் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் சரியான முறையில் எடுத்துச் செல்ல இயலாது என்றும் அவர் கூறினார்.
மேலும், அனைத்து துறைகளின் கருத்துக்களையும் பெறாமல், ஒரே துறைக்கு சாதகமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் சிவக்குமார் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராணி, புதிய திட்டங்களால் தோட்டக்கலைத் துறையின் அடையாளமே மங்கும் அபாயம் உருவாகியுள்ளது எனக் கூறினார்.
வல்லுநர் குழுவை அமைக்காமல் திடீரென அரசாணை வெளியிடப்பட்டு, 196 அலுவலர்கள் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், அரசு இதுவரை செவிசாய்க்காததால், புத்தாண்டு நாளிலும் மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்வதாக செந்தில்ராணி தெரிவித்தார்.