மை பாரத் போட்டிகளில் சாதனை படைத்த தமிழக இளைஞர்கள்
மை பாரத் அமைப்பு நடத்திய பல்வேறு போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 80 இளைஞர்கள், தேசிய இளைஞர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற உள்ளனர். இந்த கலந்துரையாடல் “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி, நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, மை பாரத் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து, எந்த அரசியல் பின்னணியும் இல்லாத இளைஞர்களைத் தேர்வு செய்து, “வளர்ச்சியடைந்த பாரதம் – இளம் தலைவர்கள் உரையாடல்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் பல்வேறு போட்டிகளில் தேர்ச்சி பெற்ற தமிழக இளைஞர்கள் 80 பேர், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, நாட்டின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.