2026 ஆங்கில புத்தாண்டு – தமிழகம் முழுவதும் உற்சாக விழா!
புதிய ஆங்கில ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
சென்னையின் பல இடங்களில் இடைவிடாது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர். அவர்கள் வாணவேடிக்கைகள் வெடித்தும், இனிப்பு வகைகளைப் பகிர்ந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள வணிக மையத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. அங்கு கூடியிருந்த மக்கள் இசைக்கு ஏற்ப நடனமாடி, பாடல்களைப் பாடி உற்சாகத்தில் மூழ்கினர்.
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள அடுக்கக குடியிருப்பில் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுகளில் அந்த குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகள் முதல் மூத்தவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நெல்லை ஜோதிபுரத்தில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், பாடி ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் புத்தாண்டு வரவேற்புக்காக சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பல்வேறு ஆன்மிக இசைப் பாடல்கள் ஒலித்தன. பல நிற ஒளிகளால் அலங்கரிக்கப்பட்ட ஆதியோகி சிலை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
அதேபோல், புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைத்துத் தரப்பினரும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.