பனகஹள்ளி கிராம மயான உரிமை விவகாரம் : வக்ஃபு வாரிய கோரிக்கைக்கு எதிரான வழக்கில் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பனகஹள்ளி கிராம மயானத்துக்கு வக்ஃபு வாரியம் உரிமை கோருவது தொடர்பான வழக்கில், மாவட்ட ஆட்சியர் உரிய பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பனகஹள்ளி மற்றும் பாளையம் கிராமங்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயான நிலம், தற்போது வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது எனக் கூறப்படுவதாகவும், அந்த மயானத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் பயன்படுத்தி வரும் அரசுக்குச் சொந்தமான நிலத்தை, திடீரென வக்ஃபு வாரியம் தனது சொத்தாகக் கூறுவது நியாயமற்றது என வாதிட்டார்.
இந்த வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியரும், கோவை வக்ஃபு வாரிய கண்காணிப்பாளரும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில் யாரேனும் உயிரிழந்தால், அந்த உடல்களை தகனம் அல்லது அடக்கம் செய்வதற்கான மாற்று இடத்தை அதிகாரிகள் அடையாளம் காண வேண்டும் என்றும், பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்ப இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.