உலகின் நம்பர்–1 ஏஐ யூடியூப் சேனல் : இந்தியர்களின் அசாதாரண சாதனை!
முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கும் யூடியூப் சேனல்களில், உலகளவில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சேனல் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. அந்த சேனல் எது? அதன் வருமானம் எவ்வளவு? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் முக்கிய டிஜிட்டல் தளங்களில் யூடியூப் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது. அதே நேரத்தில், பல லட்சம் மக்களுக்கு நிரந்தர வருமானம் தரும் தளமாகவும் யூடியூப் மாறியுள்ளது. பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், கேமிங், உணவு, மதிப்பீடு போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சேனல்கள் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன.
உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் இத்தகைய யூடியூப் சேனல்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, Kapwing எனும் வீடியோ எடிட்டிங் தளம் சமீபத்தில் விரிவான ஆய்வொன்றை நடத்தியது. இந்த ஆய்வில் சுமார் 15,000 யூடியூப் சேனல்கள் கண்காணிக்கப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், யூடியூப் உள்ளடக்க தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகம் முழுவதும் 278 யூடியூப் சேனல்கள் முழுமையாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே வீடியோக்களை வெளியிட்டு, பெரும் பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.
இந்த 278 சேனல்கள் இணைந்து மொத்தமாக 63 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதுடன், 22 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களையும் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது இந்தியாவைச் சேர்ந்த யூடியூப் சேனல் என்பதே பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த சேனலின் பெயர் “Bandar Apna Dost”. Boltu Bandar என்ற குரங்கு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, இந்த சேனல் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இவ்வீடியோக்கள் அனைத்தும் முழுமையாக செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை.
நீண்ட நேர வீடியோக்களை தவிர்த்து, Shorts எனப்படும் குறுகிய நேர காணொளிகளையே இந்த சேனல் பிரதானமாக வெளியிட்டு வருகிறது. நகைச்சுவை, உணர்ச்சி, கோபம், சோகம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான உள்ளடக்கங்களை இந்த சேனல் வழங்கி வருகிறது.
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த யூடியூப் சேனல், தற்போது 28 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களையும், 250 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளையும் பெற்றுள்ளது.
Kapwing தளத்தின் தகவலின்படி, Bandar Apna Dost சேனலின் ஆண்டு வருமானம் மட்டும் சுமார் 38 கோடி ரூபாயாகும். இந்த அபார சாதனை குறித்து அறிந்த இணையவாசிகள், அந்த சேனலுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தொழில்நுட்ப வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர் என்பதையும், இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளதாக அவர்கள் பெருமிதத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.