இன்டர்நெட் கேபிளை பிடித்து 60 அடி மேம்பாலத்திலிருந்து கீழே பாய்ந்த இளைஞர்!
சென்னை ஆவடி பகுதியை அடுத்த நெமிலிச்சேரியில், அறுபது அடி உயரம் கொண்ட மேம்பாலத்திலிருந்து இளைஞர் ஒருவர் இன்டர்நெட் கேபிளை பயன்படுத்தி கீழே இறங்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேம்பாலத்தின் உச்சியில் இருந்து அந்த இளைஞர், அருகில் இருந்த இன்டர்நெட் கேபிளை பிடித்துக் கொண்டு கீழே இறங்க முயன்ற போது, அப்பாதையில் சென்ற வாகன ஓட்டிகள் அவரை தடுத்து எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களின் அறிவுரைகளை பொருட்படுத்தாமல், கேபிளை பிடித்தபடியே அந்தரத்தில் தொங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பாதுகாப்பாக கீழே இறங்குமாறு அந்த இளைஞரிடம் அறிவுறுத்தினர். இந்நிலையில், திடீரென கேபிள் துண்டிக்கப்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் சிறிய காயங்களுடன் அந்த இளைஞர் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? அல்லது ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முயன்றாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.