கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிய சென்னை பல்கலைக்கழகம்!
தொடர்ந்து ஏற்பட்டுவரும் நிதி சிக்கல்களால் சென்னை பல்கலைக்கழகம் கடும் அழுத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்தின் மூலதனச் சேமிப்பு தொகை 346 கோடி ரூபாயிலிருந்து தற்போது 176 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்பான விவகாரங்களில், துணைவேந்தர் நியமனம் முதல் நிதி ஒதுக்கீடு வரை, மாநில அரசும் மத்திய அரசும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநில பல்கலைக்கழகங்களில் பெரிய அளவிலான ஆராய்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்படாததால், பல்கலைக்கழக மானியக் குழுவிலிருந்து (UGC) வழங்கப்படும் நிதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தொகை கிடைக்காமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முனைவர் பட்டம் பெறும் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில், யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை பின்பற்றலாமா அல்லது தவிர்க்கலாமா என்ற குழப்பத்தில் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சமீபத்தில் நடைபெற்ற ஆட்சி மன்றக் கூட்டத்தில் அனுமதி பெற்ற பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தின் மூலதன நிதியிலிருந்து 176 கோடி ரூபாயை மாநில அரசு எடுத்துக் கொண்டதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் விளைவாக, பல்கலைக்கழகத்தின் மூலதனச் சேமிப்பு தொகை 346 கோடி ரூபாயிலிருந்து 176 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், ஆட்சி மன்றத்தின் இந்த அணுகுமுறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிலையைப் போலவே, சென்னை பல்கலைக்கழகத்தையும் செயலற்ற நிலையில் தள்ளும் அபாயம் உள்ளதாக கல்வி வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.