நீதிமன்ற தீர்ப்பை மீறி சாதியற்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை – நெல்லை வருவாய்துறைக்கு எதிராக குற்றச்சாட்டு
நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு இருந்தும், நெல்லை மாவட்டத்தில் உள்ள வருவாய்துறை அதிகாரிகள் சாதியற்ற சான்றிதழ் வழங்க தயக்கம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தனது குழந்தைகள் சாதி அடையாளமின்றி வளர வேண்டும் என்ற நோக்கில், “சாதி இல்லை” எனக் குறிப்பிடப்பட்ட சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பம் அளித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு, கடந்த ஜூன் 10ஆம் தேதி முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில், யாரேனும் சாதி குறிப்பிட வேண்டாம் எனக் கோரி விண்ணப்பித்தால், அந்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்க வேண்டும் எனத் தெளிவாக உத்தரவிட்டனர். மேலும், இதற்கான நடைமுறைகளை வகுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையை, உரிய விதிமுறைகள் இல்லை என்ற காரணத்தால் மறுக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினர்.
இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரவலான கவனத்தை பெற்றது. எந்த ஒரு குடிமகனும் தன் விருப்பப்படி, எந்தச் சாதியையும் சாராதவர் என அறிவித்து அதற்கான சான்றிதழை பெற முடியும் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்தது.
ஆனால், இந்த தீர்ப்புக்கு பிறகும் நெல்லை மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு பலர் சாதியற்ற சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்தாலும், ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து அலுவலகங்களுக்கு சென்று அலைக்கழிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை அனைத்து மாவட்ட அதிகாரிகளும் கட்டாயமாக பின்பற்றும் வகையில், தமிழக அரசு உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாதியற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த தீர்ப்பு ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைந்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.