அரசு சொத்தையே அரசிடம் விற்று ரூ.16 கோடி மோசடி – குற்றவாளிகள் தலைமறைவு
சென்னை திருவான்மியூர் பகுதியில், அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி முறையில் அரசுக்கே விற்பனை செய்து, சுமார் 16 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைத் துறை மூலம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர், அரசு உரிமையில் உள்ள நிலத்தை தனியாருக்குச் சொந்தமானதாக காட்டி, போலியான ஆவணங்களை தயாரித்து பதிவு செய்து, ரூ.16 கோடி 18 லட்சம் அளவிலான இழப்பீட்டு தொகையை முறைகேடாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மோசடி குறித்து ஒருவர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், கள்ள ஆவணங்கள் உருவாக்கப்பட்டு பணம் பெற்றது உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய நடராஜன், பதிவுத்துறை சார்பதிவாளர் சண்முகம், உதவியாளர் ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட பலரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.