கிருஷ்ணகிரி: வட்டாட்சியர் வாகனத்தை வழிமறித்து மிரட்டல் – இரு மணல் கடத்தல் கும்பலை போலீஸ் தேடுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, வட்டாட்சியர் பயணித்த காரை வழிமறித்து அச்சுறுத்தியதாக மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தாதம்பட்டி அருகிலுள்ள ஆனந்தூர் ஏரியில் சட்டவிரோத மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், ஊத்தங்கரை வட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு ஆய்வுக்குச் சென்றது.
அப்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட சிலர், ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி அதிகாரிகளின் காரைத் தடுத்து நிறுத்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போச்சம்பள்ளி காவல் துறையினர் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை கைப்பற்றினர். மேலும், தப்பியோடிய மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு வாகன ஓட்டுநர்களை கண்டுபிடிக்க போலீசார் வலைவீசி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.