திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி மீது கஞ்சா போதையில் தாக்குதல் – திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை
திருத்தணி பகுதியில் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் மீது கஞ்சா போதையில் இளைஞர்கள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு, தமிழக அரசை முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கடுமையாகக் கண்டித்து உள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியில் கொடிய ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பது சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டதாவது,
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி சூரஜ், திருத்தணி பகுதியில் பணிபுரிந்து வந்த நிலையில், சில இளைஞர்கள் கஞ்சா போதையில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றதாகவும், அதற்காக ஒருவர் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டதை சூரஜ் தட்டிக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தொழிலாளி சூரஜ் மீது கொடிய ஆயுதங்களைக் கொண்டு கொடூரமாக தாக்கியதாகவும், இந்தச் சம்பவம் சமூகத்தையே உலுக்கியதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கவலைக்கிடமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், போதைப் பொருட்கள் மிக எளிதில் கிடைப்பதும், வன்முறையை சமூகத்தில் பெருமையாக காட்டும் போக்கும் இவ்வாறான குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
ஒருகாலத்தில் ஒழுக்கமும் பாதுகாப்பும் நிறைந்த மாநிலமாக விளங்கிய தமிழகம், தற்போது காட்டுமிராண்டித்தனமும் சட்டமின்மையும் தலைதூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அண்ணாமலை, இதற்கான முழுப் பொறுப்பையும் திமுக அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.