பல் மருத்துவர்களின் கோரிக்கைகளை அலட்சியம் செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றும் அரசு பல் மருத்துவர்களின் எதிர்காலத்தை திமுக அரசு திட்டமிட்டு பாதித்து வருவதாக, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்கள் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம், திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய திமுக ஆட்சியில், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக தூய்மைப் பணியாளர்கள் முதல் அரசு மருத்துவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் போராட்டப் பாதையில் இறங்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
‘நல்லாட்சி’ என தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் திமுக ஆட்சியில், அரசு ஊழியர்களே இத்தகைய துயரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும், அரசு வேலை என்ற கனவுடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் அரசு வேலைவாய்ப்புகள், தற்காலிக ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கரை ஆண்டுகளாக அவற்றை நிறைவேற்றாமல் ஊழல், விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் தேவையற்ற செலவுகளிலேயே கவனம் செலுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், திமுக தலைவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகாரமும் பதவிகளும் கிடைப்பதில் மட்டுமே அக்கறை காட்டி, தங்களை நம்பி வாக்களித்த தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை புறக்கணித்துவிட்டதாகவும், இது வெளிப்படையான நம்பிக்கைத் துரோகம் எனவும் அவர் விமர்சித்தார்.
ஏற்கனவே அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியவர்கள், மீண்டும் அடுத்த தேர்தலுக்காக புதிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைத்துள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசியல் நிலைமைக்கு சாட்சியாக இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்