ஆபரேஷன் சிந்தூருக்கு அஞ்சியதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது, பாதுகாப்பு காரணமாக பதுங்கு குழிக்குள் சென்று இருக்குமாறு பாகிஸ்தான் ராணுவம் தன்னை அறிவுறுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அவரது இந்தப் பேச்சு, சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், ஆசிப் அலி ஜர்தாரியின் மனைவியுமான பேநசீர் புட்டோ, 2007ஆம் ஆண்டு ராவல்பிண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அவரது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஜர்தாரி, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடங்கிய பிறகு, பாகிஸ்தான் ராணுவத்துறை செயலர் தன்னை பதுங்கு குழிக்குள் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறினார். இருப்பினும் அந்த ஆலோசனையை தாம் நிராகரித்ததாகவும், “தலைவர்கள் பதுங்கு குழியில் உயிர் காக்கக் கூடாது; அவர்கள் போர்க்களத்தில் தான் உயிர் தியாகம் செய்ய வேண்டும்” என தாம் கூறியதாகவும் ஜர்தாரி தெரிவித்தார்.
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளும், அந்நாட்டு ராணுவமும் பெரும் அதிர்ச்சியடைந்ததாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஆபரேஷன் சிந்தூரால் ஏற்பட்ட சேதங்களை சர்வதேச அரங்கில் ஒப்புக்கொள்ளாமல், பாகிஸ்தான் இதுவரை கௌரவம் காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், அந்நாட்டு துணை பிரதமர் முதல் அதிபர் வரை ஒருவர் பின் ஒருவராக, இந்திய ராணுவ நடவடிக்கையால் ஏற்பட்ட அச்சத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தி வருவது, பாகிஸ்தானின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, ஆசிப் அலி ஜர்தாரியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தையும், கிண்டலையும் சந்தித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானை எந்த அளவுக்கு அதிரவைத்தது என்பதற்கான வெளிப்படையான சான்றாக இந்த உரை அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.