போதையின் பிடியில் இளைஞர்கள் – பெண்களுக்கு பாதுகாப்பற்ற தமிழக ஆட்சி : நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
போதையின் பாதையில் செல்லும் இளைஞர்களால் தமிழகப் பெண்கள் தொடர்ந்து பலியாகி வருவதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பகுதியில் நடந்த சம்பவம் தமிழக சமூகத்தை உலுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதீத மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல்கள் நெஞ்சை பதற வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி, ஒரு தந்தையாக இந்தக் கொடூரச் சம்பவத்தை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும், பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை முழுமையான மன மற்றும் உடல் நலத்துடன் மீண்டு வர இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும், டாஸ்மாக் மாடல் ஆட்சியின் கீழ் போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் குற்றச்செயல்களின் பின்னணியில் மதுபோதையே பிரதான காரணமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையளிப்பதாகவும், அரசு நிர்வாகத்தின் ‘இரும்புக்கரம்’ முற்றிலும் பலவீனமடைந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
பெண்களுக்கு அடிப்படை பாதுகாப்பே இல்லாத சூழலில் ஆட்சி நடத்திக்கொண்டு, “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற விளம்பர வாசகங்களை முன்னிறுத்துவது திமுகவின் இரட்டை வேடம் என்றும், இதற்காக திமுகவினர் தலை குனிய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், மழலை மனம் மாறாத சிறுமியைச் சீரழித்த குற்றவாளியும், கடந்த நான்கரை ஆண்டுகளாக பெண்களின் பாதுகாப்பை புறக்கணித்து ஆட்சி நடத்தி வரும் அறிவாலய அரசும், எந்த வித தயவுதாட்சண்யமும் இன்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசு நீதியின் நெருப்பில் சுட்டுப் பொசுக்கப்படும் எனவும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.