கன்யாகுமரி அருகே கோயில் சிலைகள் அகற்றம்: அதிகாரிகளுக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்
கன்யாகுமரி மாவட்டம் அருகே உள்ள கோயில்களில் இருந்து மூலவர் சிலைகள் அகற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில் “மகா சண்டிகா யாகம்” நடத்தப்பட்டது. இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முடியம்பாறையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலின் மூலவர் சிலை மற்றும் மயிலாடும்பாறை மலைப்பகுதியில் அமைந்துள்ள முருகன் சிலை ஆகியவற்றை, அரசு நிலத்தில் கோயில்கள் அமைந்துள்ளதாகக் கூறி, அதிகாரிகள் அகற்றியுள்ளனர். அகற்றப்பட்ட இந்தச் சிலைகள், வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் அந்தந்த கோயில்களில் நிறுவ வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும், கோயில் சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியும், கல்லு பாலம் இசக்கி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சார்பில் மகா சண்டிகா யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
யாகத்தின் நிறைவில், பூஜிக்கப்பட்ட புனித நீரை முடியம்பாறை பத்ரகாளி அம்மன் கோயிலில் தெளிப்பதற்காக 11 பேர் சென்றனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர், புனித நீரை அங்கேயே தரையில் ஊற்றினர். தொடர்ந்து, சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறி, காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, கோயில் சிலைகளை மீண்டும் நிறுவ வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.