வந்தே பாரத் உட்பட 7 விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்
சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயில் உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் 7 விரைவு ரயில்களின் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நேர மாற்றம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில், இதுவரை பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு வந்த நிலையில், இனி பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாம்பரம் – கொல்லம் விரைவு ரயில், மாலை 5.27 மணிக்கு பதிலாக, இனி மாலை 5.15 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை விரைவு ரயில், முன்பு மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட நிலையில், இனி பிற்பகல் 1.15 மணிக்கே புறப்படும்.
அதேபோல், எழும்பூர் – தூத்துக்குடி இடையேயான முத்துநகர் விரைவு ரயில், இரவு 7.30 மணிக்கு பதிலாக, இனி இரவு 7.15 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை விரைவு ரயில், இரவு 8.10 மணிக்கு பதிலாக, இனி இரவு 7.35 மணிக்கு புறப்படும்.
மேலும், எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது விரைவு ரயில், மாலை 5.45 மணிக்கு பதிலாக, இனி மாலை 5.55 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நேர மாற்றங்களை பயணிகள் கவனத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.