வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தால் ரூ.2 லட்சம், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சமா? – திமுக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்
நீலகிரி மாவட்டம், உதகையில் பாஜக சார்பில் நடைபெற்று வரும் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பரப்புரை நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் திமுக அரசின் சட்டம்–ஒழுங்கு நிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
போதைப்பொருள் விற்பனையை “இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை நினைவூட்டிய நயினார் நாகேந்திரன், தற்போது அந்த இரும்புக் கரம் துருப்பிடித்து விட்டதா? எனக் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பள்ளி வளாகங்களின் முன்பே போதைப்பொருட்கள் விற்கப்படும் அவல நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு திமுக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது எனத் தெரிவித்த நயினார் நாகேந்திரன்,
“தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தால் ரூ.2 லட்சம் கூட வழங்கப்படுவதில்லை. இது எந்த விதமான நீதி?” எனக் கேள்வி எழுப்பினார்.
அரசின் இழப்பீடு வழங்கும் கொள்கையில் வெளிப்படையான பாரபட்சம் இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், உழைக்கும் ஏழை மக்கள் மற்றும் வனப்பகுதி மக்களின் உயிருக்கு மதிப்பில்லை என்பதையே இது காட்டுகிறது எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும், சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். திமுக அரசு மக்கள் பாதுகாப்பை விட அரசியல் கணக்குகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்படுகிறது எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.