மகளிர் உரிமைத் தொகையை மறைமுகமாக விமர்சித்த சௌமியா அன்புமணி
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் “தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்” என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவியும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சௌமியா அன்புமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறைமுகமாக விமர்சித்து, பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி திமுக அரசு பெண்களை ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாட்டினார். பெண்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பும், சுயநிலையும் ஏற்படுத்தும் திட்டங்களே உண்மையான உரிமை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாகக் குவிந்து கிடக்கும் குரோமியம் கழிவுகளை அகற்ற அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் உருவாகியுள்ளதாகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் சௌமியா அன்புமணி சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் அரசு அலட்சியமாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் உறுதியளித்தார்.
இந்தக் கூட்டத்தில் பாமக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.