கோவை: பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் உயிரிழப்பு – கணவன் கண்முன்னே நேர்ந்த கோர விபத்து
கோவையில், கணவன் கண்முன்னே மனைவி தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பொதுமக்களிடையே கடும் வேதனையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மரக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது ரஃபீக் என்பவர், தனது மனைவி ராபியத்துல் பஷிரியா உடன் இருசக்கர வாகனத்தில் பயணித்து வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சரிந்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, சாலையில் விழுந்த ராபியத்துல் பஷிரியாவை கவனிக்காமல் சென்றதால், பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் அவரது தலை சிக்கி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கணவன் முகமது ரஃபீக்கின் கண்முன்னே நிகழ்ந்தது அப்பகுதியில் இருந்தவர்களை உறைய வைத்தது.
இந்த விபத்தில் முகமது ரஃபீக் கடுமையாக காயமடைந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தின் ஓட்டுநரான ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விபத்து நடந்த தருணத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, தனியார் பேருந்துகளின் அதிவேகம் மற்றும் அலட்சியமான ஓட்டம் குறித்து மீண்டும் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில், பேருந்து ஓட்டுநர்களின் வேகக் கட்டுப்பாடு, கடும் நடவடிக்கைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.